மும்பை ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை விவகாரம்.. சக மாணவர்கள் விடிய விடிய போராட்டம்!

 

மும்பை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் தேர்வின்போது செல்போன் மூலம் காப்பியடித்ததாகக் கூறப்பட்ட புகாரில் சிக்கிய மாணவர் ஒருவர் விடுதி அறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு சக மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் புகழ்பெற்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான மும்பை ஐ.ஐ.டி. பவாய் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு மகாராஷ்டிராவின் யவத்மால் பகுதியைச் சேர்ந்த சாகில் வகோடே (22) என்ற மாணவர், பி.டெக். ஆற்றல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கல்லூரியின் தேர்வின் போது மாணவர் சாகில் வகோடே செல்போனுடன் சிக்கியுள்ளார். அவர் சாட் ஜி.பி.டி தொழில்நுட்பம் மூலம் வினாத்தாள்களைப் பதிவேற்றம் செய்து விடைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. தேர்வில் காப்பியடித்ததாகக் கல்லூரியில் சிக்கியதால் மாணவர் மன உளைச்சலுக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளார்.

தேர்வுக்குப் பின் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி அறைக்குச் சென்ற மாணவர் வெகுநேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவர்கள் மாலையில் சென்று அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, மாணவர் சாகில் வகோடே தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

மாணவரின் திடீர் மரணம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவரின் மரணத்திற்கு நீதி கோரி கல்லூரி வளாகத்தில் திரண்ட மாணவர்கள் விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்வு பொறுப்பாளர், ஐ.ஐ.டி. இயக்குநர் மற்றும் ஆற்றல் அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர்கள் உடனடியாகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மாணவர்களின் தொடர் போராட்டத்தால் மும்பை ஐ.ஐ.டி. வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியதுடன், அங்கு நடைபெற்று வந்த செமஸ்டர் தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மாணவரின் தற்கொலை குறித்து பவாய் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த மாணவரின் தாய், "என் மகன் தற்கொலை செய்யவில்லை; அவன் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளான். எனக்கு நீதி வேண்டும்" என்று கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.