'16 வயதினிலே', 'முள்ளும் மலரும்' உட்பட 134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது - டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

ஒட்டுமொத்த இந்திய இசை உலகையும் உலுக்கும் படியான ஒரு மிகப்பெரிய பதிப்புரிமை வழக்குத் தீர்ப்பு டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து வெளியாகியுள்ளது.

இசைஞானி இளையராஜாவுக்கு, அவர் இசையமைத்த ஆரம்பகால படைப்புகளின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் எனச் 'சரிகம' இசை நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

அந்தந்தத் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் தாங்கள் முறைப்படி சட்டபூர்வ ஒப்பந்தம் செய்து, அதற்கான நிரந்தரமான காப்புரிமையைப் பெற்றுள்ளதாகச் சரிகம நிறுவனம் வாதிட்டது. இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி அமேசான் மியூசிக் , ஐ-டியூன்ஸ் , ஜியோசாவ்ன் போன்ற முன்னணி டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது முற்றிலும் சட்டவிரோதமானது எனச் சரிகம தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1957-இன் படி, ஒரு திரைப்படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்கு அதன் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்ற சட்ட விதியை நீதிமன்றத்தில் சரிகம வலுவாக முன்வைத்தது.

சரிகம நிறுவனத்தின் வாதங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், இளையராஜாவின் காலத்தால் அழியாத காவியப் பாடல்கள் அடங்கிய 134 படங்களுக்கு அவர் உரிமை கோர முடியாது எனத் தீர்ப்பளித்துள்ளது.

இளையராஜாவின் இசைப் பயணத்தில் மைல்கல்லாகக் கருதப்படும் 'அன்னக்கிளி', '16 வயதினிலே', 'முள்ளும் மலரும்', 'ராஜ பார்வை' மற்றும் 'நெற்றிக்கண்' உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தவோ அல்லது பிற நிறுவனங்களுக்கு உரிமம்  வழங்கவோ தற்போதைய நிலையில் இளையராஜாவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சரிகம நிறுவனத்திற்குச் சாதகமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை  நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் மூலம், இந்த 134 படங்களின் இசை உரிம விவகாரத்தில் இசைஞானி இளையராஜாவுக்குத் தற்போதைக்கு எவ்வித இடைக்கால நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.