"மீண்டும் வருவேன்... மே.வங்க பாஜக பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன்” - பிரதமர் மோடி உறுதி!

 

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 27) வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பராக்பூர் (Barrackpore) பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

"மேற்குவங்க மக்களின் மனநிலையைப் பார்க்கும்போது, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு (மே 4), பாஜக ஆட்சியமைக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க நான் மீண்டும் இங்கு வருவேன் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பீகார் மற்றும் ஒடிசாவைத் தொடர்ந்து தற்போது மேற்குவங்கத்திலும் தாமரை மலரப்போகிறது என்றும், "அங்கம், வங்கம், கலிங்கம்" (பீகார், மேற்குவங்கம், ஒடிசா) ஆகிய மூன்று தூண்களும் வலுப்பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி முழுமையடையும் என்றும் குறிப்பிட்டார்.

தனது தேர்தல் ரோடு ஷோக்கள் மற்றும் பரப்புரைகள் தமக்கு ஒரு அரசியல் நிகழ்வாகத் தெரியவில்லை என்றும், அவை ஒரு 'தீர்த்த யாத்திரை' போன்ற ஆன்மீக உணர்வைத் தந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், மேற்குவங்கத்திலும் அதே போன்ற ஒரு வெற்றியை அவர் கணித்துள்ளார்.

முதற்கட்டத் தேர்தல் (152 இடங்கள்) ஏப்ரல் 23ம் தேதி முடிந்த நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தல் (142 இடங்கள்) வரும் ஏப்ரல் 29ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி. தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதமரின் இந்த "பதவியேற்பு விழா" குறித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.