"கல்லறைக்குப் போகும் வரை தவெகவில் தான் இருப்பேன்" - நாஞ்சில் சம்பத்

 

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகி விட்டதாகவும், அவர் வேறு கட்சியில் இணையப்போவதாகவும் கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வேகமாகப் பரவி வந்தன.

இந்த வதந்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத், "தமது அரசியல் பயணத்தைக் களங்கப்படுத்தும் நோக்கில் சிலர் இத்தகைய பொய்யான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இத்தகைய மலிவான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், "என் ஆயுட்காலம் முடிந்து கல்லறைக்குச் செல்லும் வரை தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவே பணியாற்றுவேன். தலைவர் விஜய்யின் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தை வளர்த்தெடுக்க என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன்" எனத் தெளிவுபடுத்தியுள்ளார். நாஞ்சில் சம்பத்தின் இந்த உறுதியான அறிக்கை, தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.