‘அப்பாகிட்டே சொல்லிடுவேன்’ன்னு சொன்னான் - மகனைக் கொன்றுவிட்டு, வயிற்று வலியால் இறந்ததாக நாடகமாடிய இளம்பெண்!

 

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே, தாயின் கள்ளத்தொடர்பை நேரில் பார்த்த 14 வயது சிறுவன் கழுத்தை நெரித்துக் படுகொலை செய்யப்பட்டுள்ளான். பெற்ற மகனைக் கொன்று விட்டு உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய தாயையும் அவரது கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கான்பூர் மகாராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகி ஒரு மகன் உள்ள பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி இரவு, தாயும் அவரது கள்ளக்காதலனும் தனிமையில் இருந்ததை அந்தப் பெண்ணின் 14 வயது மகன் எதிர்பாராதவிதமாக நேரில் பார்த்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன், இந்த விவகாரத்தை உடனடியாகத் தனது தந்தையிடம் கூறப்போவதாக எச்சரித்துள்ளான்.

தங்கள் உறவு வெளியே தெரிந்து விடும் என்ற அச்சத்தில், பெற்ற தாய் மகனின் கைகளைப் பிடித்துக் கொள்ள, அவரது கள்ளக்காதலன் சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர், சிறுவனுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உயிரிழந்ததாக நாடகமாடி குடும்பத்தினரையும் உறவினர்களையும் நம்ப வைத்துள்ளனர்.

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் அடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சிறுவனின் உடலை உடற்கூறாய்வு செய்த போது, அவனது கழுத்தில் காயங்கள் இருப்பது உறுதியானது. அதன் பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டதை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.