ம.பி.யில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு 12 ஆக உயர்வு; 10 பேர் கவலைக்கிடம்!

 

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பராஜ் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை இரவில் அருந்திய பலருக்குச் சிறிது நேரத்திலேயே கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 10-க்கும் மேற்பட்டோர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட கிராமங்களில் அவசர மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான மதுபானக் கடைகளுக்குச் சீல் வைக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும், முழுமையான மருத்துவப் பரிசோதனை மற்றும் விசாரணை அறிக்கைகள் வந்த பின்னரே மரணத்திற்கான சரியான அறிவியல் பூர்வமான காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கள்ளச்சாராயம் எங்கிருந்து மற்றும் யாரிடமிருந்து விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமான மற்றும் பொறுப்பானவர்கள் மீது அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.