கள்ளக்காதல் விபரீதம்... 2 குழந்தைகளின் தாய், 17 வயது சிறுவனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 26 வயது குடும்பப் பெண்ணும், 17 வயது சிறுவனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த போதாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (26). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவருக்கும் திருச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் வழக்கம் போல் வெளியில் ஊர் சுற்றச் செல்வதாகத் தங்களது வீடுகளில் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், நேற்று முன்தினம் இரவு மணக்கால் ரயில்வே கேட் பகுதிக்கு வந்த இருவரும், அந்த வழித்தடத்தில் வந்த ரயில் முன் திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
ரயில் தண்டவாளத்தில் இருவர் இறந்து கிடப்பது குறித்துத் தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தத் தற்கொலைச் சம்பவத்திற்கான காரணம் என்ன, குடும்பத்தினரின் எதிர்ப்பு காரணமா அல்லது வேறு ஏதேனும் விபரங்கள் உள்ளதா என்பது குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.