கள்ளக்காதல் விபரீதம்... கணவனைக் கொன்று புதைத்த மனைவி... மகளையும் கொல்ல முயற்சி!

 

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்தராயுடு (43) என்பவர் கடந்த மூன்று மாதங்களாகக் காணாமல் போனதாகக் கருதப்பட்ட நிலையில், அவர் தனது மனைவியாலேயே படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டது கொலையான 3 மாதங்களுக்குப் பின்னர் தற்போது தெரிய வந்துள்ளது.

ஹனுமந்தராயுடு - சுகன்யா தம்பதிக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், சுகன்யாவுக்கு வேறொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்துத் தெரிந்த கணவர் ஹனுமந்தராயுடு, சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தனது மனைவியைக் கண்டித்துள்ளார். கள்ளக்காதலைக் கைவிடுமாறு வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த சுகன்யா, தூங்கிக் கொண்டிருந்த தனது கணவரைத் தலையில் கல்லால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், யாருக்கும் தெரியாமல் உடலைத் தூக்கிச் சென்று வீட்டின் பின்புறமே குழி தோண்டிப் புதைத்து மறைத்துள்ளார். கணவர் எங்கே என்று கேட்டவர்களுக்கு, அவர் வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

தாயின் நடத்தையில் சந்தேகமடைந்த மகள், இது குறித்துத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளார். நேற்று முன்தினம் தாய்க்கும் மகளுக்கும் இடையே இது தொடர்பாகப் பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, உண்மையை மறைக்கத் துணிந்த சுகன்யா, தனது மகளையும் கொலை செய்ய முயன்றுள்ளார்.

தாயின் பிடியில் இருந்து தப்பிய மகள், உடனடியாக இது குறித்து உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் சுகன்யாவைக் கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர் தனது கணவரைக் கொன்று புதைத்ததை ஒப்புக் கொண்டார்.

காவல்துறையினர் இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் வீட்டின் பின்புறம் தோண்டி, ஹனுமந்தராயுடுவின் எலும்புக்கூடாக மாறிய உடலை மீட்டனர். 18 ஆண்டுகாலத் திருமண வாழ்க்கையைத் தனது கள்ளக்காதலுக்காக ஒரு பெண் சிதைத்த சம்பவம் அனந்தபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.