“மகளுடன் தகாத உறவு... எச்சரித்தும் கேட்கல”... வீடு புகுந்து இளைஞரைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை... சென்னையில் பயங்கரம்!
சென்னை பெரம்பூரில் தனது மகளுடன் பழகி வந்த 33 வயது இளைஞரை வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்த பெண்ணின் தந்தையைச் செம்பியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 53, தந்தை பெயர் கண்ணன்). இவரது மகள் காயத்ரி தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், காயத்ரிக்கும் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான ரமேஷ் தனது மகளுடன் பழகுவதை அறிந்த தந்தை பாபு, இதனை கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும், மகளுடன் பழகுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு ரமேஷை ஏற்கனவே பலமுறை கண்டித்து எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் மீறி இருவரும் தொடர்ந்து பழகி வந்ததால் ஆத்திரமடைந்த பாபு, இரவு பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, சக்ரபாணி தோட்டத்தில் உள்ள ரமேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ரமேஷின் வீட்டிற்குச் சென்ற பாபு, தனது மகளுடன் பழகுவதை நிறுத்துமாறு மீண்டும் கண்டித்துள்ளார். அப்போது பாபுவுக்கும் ரமேஷுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பாபு தான் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியை எடுத்து ரமேஷை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து உயிரிழந்த ரமேஷின் மனைவி ஷர்மிளா என்பவர் K-1 செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்குப்பதிவு செய்த செம்பியம் காவல்துறையினர், தலைமறைவாக இருந்த பாபுவை (53) விரைந்து கைது செய்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைப் பறிமுதல் செய்த போலீசார், பாபுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.