"கடன்ல இருக்கேன்.. தயவுசெஞ்சு சப்போர்ட் பண்ணுங்க" - கண்ணீருடன் வனிதா விஜயகுமார்!
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, அவரது மகள் ஜோவிகா தயாரிப்பில் வெளியான 'Mrs & Mr' திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய் கடன் சுமை குறித்து வனிதா தனது யூடியூப் நேரலையில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம், "புரிதல் இல்லாத நகைச்சுவை மற்றும் பலவீனமான திரைக்கதை" என விமர்சகர்களால் கடுமையாகச் சாடப்பட்டது. இதனால் திரையரங்குகளில் வசூல் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, முன்னணி ஓடிடி தளங்களும் இந்தப் படத்தை வாங்க முன்வரவில்லை என வனிதா தெரிவித்துள்ளார்.
நேரலையில் கண்ணீர் மல்கப் பேசிய வனிதா, "இந்தப் படத்திற்காக நான் கடன் வாங்கி எனது முழு உழைப்பையும் செலுத்தினேன். எனக்கு வேறு பெரிய வருமான வழிகள் இல்லை. என் மகள் ஜோவிகாவும் இப்போது தான் தயாரிப்பாளராக அடி எடுத்து வைத்துள்ளார். தற்போது திரையரங்குகளும், ஓடிடி தளங்களும் கைகொடுக்காத நிலையில் நான் நடுத்தெருவில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.
தனது பொருளாதார நிலையை மீட்டெடுக்க வனிதா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். Mrs & Mr' திரைப்படம் வரும் ஜூலை 18ம் தேதி அன்று வனிதாவின் சொந்த யூடியூப் சேனலில் வெளியாகிறது. இந்தப் படத்தைப் பார்க்க விரும்புவோர் அவரது யூடியூப் சேனலில் உறுப்பினராக இணைய வேண்டும். "தயவுசெய்து எனக்கு ஆதரவு அளியுங்கள், சேனல் மெம்பராகி படத்தைப் பாருங்கள்" என அவர் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
படம் ஏற்கனவே தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தனது "சிவ ராத்திரி" பாடலை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாகத் தொடர்ந்த வழக்கு, வனிதாவிற்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் இந்த யூடியூப் மெம்பர்ஷிப் முயற்சி அவருக்குக் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.