"நான் ரீல் பிக் பாஸ் அல்ல; ரியல் பிக் பாஸ்!" - பொதுக்கூட்டத்தில் சீமான் ஆவேசம்!

 

"நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்துத் தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்; நான் ரீல் பிக் பாஸ் அல்ல, ரியல் பிக் பாஸ்" என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாகப் பேசியுள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சீமான், தமிழகத்தை கடந்த 60 ஆண்டுகாலமாக மாறி மாறி ஆண்டு வரும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாகச் சாடினார். இந்த இரு கட்சிகளும் நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

தனது உரையில் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், சுற்றுசூழலுக்குப் பெரும் சவாலாக இருக்கும் நெகிழியை முழுமையாக ஒழித்துவிடுவோம் என உறுதியளித்தார்.

தரம் வாய்ந்த கல்வி மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் ஆகிய இரண்டையும் மட்டுமே மக்களுக்கு இலவசமாகத் தருவேன். இதைத் தவிர வேறு எதையும் மக்களிடம் இருந்து இலவசமாக எதிர்பார்க்க வேண்டாம் என்றும், இலவசங்களை விரும்புபவர்கள் மற்ற கட்சிகளுக்கு வாக்களித்துக் கொள்ளலாம் என்றும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

தொகுதியின் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்துப் பேசிய சீமான், "எங்கள் ஆட்சியில் அனைத்துத் தெருக்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இனி யாரும் தெருவில் குப்பைகளை வீசிவிட்டுச் செல்ல முடியாது. நான் ரீல் பிக் பாஸ் கிடையாது; மக்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து நாட்டைச் சீர்படுத்தும் ரியல் பிக் பாஸ்" எனத் தெரிவித்தார்.

சீமானின் இந்த 'பிக் பாஸ்' ஒப்பீடு பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மற்ற கட்சிகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்களுக்கு மாற்றாகச் சீமான் முன்வைத்துள்ள இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.