"இனி இப்படி பேசமாட்டேன்... எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க" - பொன்முடி பகிரங்க மன்னிப்பு!

 

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்துப் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளால் மனங்கள் புண்பட்டிருந்தால் உளமார்ந்த மன்னிப்பு கேட்பதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

2025-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்துப் பொன்முடி பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதன் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியையும் இழந்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவர் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் அவர் ஆஜரானதை அடுத்து பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.

விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்முடி, "எனது முந்தைய பேச்சால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக உளமாற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வழக்கு தொடர்ந்த சகோதரியிடமும் எனது வருத்தத்தையும் மன்னிப்பையும் கோரியுள்ளேன்" எனக் கூறினார்.

இனிமேல் இது போன்று பேசுவதற்கு நிச்சயமாக வாய்ப்பில்லை என்று தெரிவித்த அவர், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கு விரைவில் உரிய தீர்வு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.