‘இதை விட்டுட்டுப் போக பயமா இருக்கு..’ - மரணம் குறித்து உருகிய இயக்குநர் பாரதிராஜா!
"என் இனிய தமிழ் மக்களே..." என்ற ஒற்றை வார்த்தை மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் இதயங்களையும் வென்ற 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா சென்னையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், நள்ளிரவு 2 மணியளவில் இயற்கை எய்தினார். 84 வயதான பாரதிராஜாவின் இந்த திடீர் மறைவு, திரையுலகினர் மற்றும் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவை நான்கு சுவர்களுக்குள் இருந்த ஸ்டுடியோக்களில் இருந்து, கிராமத்து மண் வாசனைக்கும், திறந்தவெளி இயற்கைக்கும் அழைத்துச் சென்ற பெருமை இவரையே சேரும். பாரதிராஜாவின் மறைவுக்குத் திரையுலக விஐபிக்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
பாரதிராஜாவின் மறைவைத் தொடர்ந்து, மரணம் குறித்து அவர் முன்பு பேசிய உருக்கமான நேர்க்காணல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இயற்கையையும் மனிதர்களையும் தான் எவ்வளவு ஆழமாகக் காதலித்தார் என்பதைப் பகிர்ந்துள்ளார்.
இந்த உலகத்தில் இருக்கும் பூக்கள், பெண்கள், மேகங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள் என அத்தனையுமே பேரழகு என்று குறிப்பிட்ட அவர், இந்த ஒட்டுமொத்த அழகையும் ரசித்து முடித்துவிட்டதாக நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். மறுபிறவி மற்றும் ஏழேழு ஜென்மங்கள் குறித்த நம்பிக்கைகளைத் தான் ஏற்பதில்லை என்று அந்த நேர்க்காணலில் பாரதிராஜா வெளிப்படையாகக் கூறியுள்ளார். அடுத்த ஜென்மத்தில் புல்லாகவோ அல்லது பூண்டாகவோ பிறப்போம் என்று சொல்வதிலெல்லாம் தனக்கு உடன்பாடில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இந்த உலகையும், தன்னையும் அத்தனை தீவிரமாகக் காதலித்ததால், ஒருநாள் இந்த உடம்பு அழியும் என்பதை நினைக்கும்போது பயமாக இருக்கிறது என்ற தன் அடிமனது உணர்வை வெளிப்படுத்தியிருந்தார். இந்த உலகை எவ்வளவு அழகாக ரசிக்க முடியுமோ, அந்த அளவுக்குத் தான் முழுமையாக ரசித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அந்த வார்த்தைகள், தற்போது அவரது மறைவின் போது ரசிகர்களின் கண்களைக் குளமாக்கியுள்ளன.