"மன்னித்துவிடு அம்மா... நான் போகிறேன்" உருக்கமான வீடியோ வெளியிட்டு ஆசிரியை தற்கொலை!
உத்தரகாண்ட் மாநிலத்தில் வரதட்சணைக் கொடுமையால் 27 வயது அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநிலத் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அவரது கணவர் உட்படக் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெஹ்ரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் சிருஷ்டி (27). இவருக்கும், உத்தரகாண்ட் தலைமைச் செயலகத்தில் தனிச் செயலாளராகப் பணிபுரியும் சௌரப் கத்ரி என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. டேராடூனில் உள்ள டோய்வாலா பகுதியில் மாமியார் வீட்டில் வசித்து வந்த சிருஷ்டியை, கூடுதலான வரதட்சணை கேட்டு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
கணவர் வீட்டின் சித்திரவதைத் தாங்க முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்வதற்கு முன், சிருஷ்டி கண்ணீருடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மன்னித்துவிடு அம்மா... நான் போகிறேன். கடந்த ஆறு மாதங்களாக இதையெல்லாம் சகித்துக் கொண்டிருந்தேன். இனி என்னால் தாங்க முடியாது. எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தேன்... ஆனால் இவர்கள் ஒருபோதும் மாற மாட்டார்கள்" எனக் கதறியப்படிப் பேசியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சிருஷ்டியின் தாயார் சீமா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சிருஷ்டியின் கணவர் சௌரப் கத்ரி, மாமியார் பர்வீனா தேவி, நாத்தனார் சாரு கத்ரி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட சிருஷ்டியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.