தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

தென்னிந்தியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலக் கடலோரப் பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலக் கடலோரப் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாகத் தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காணப்படுகிறது.

ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை பெய்யும் சமயங்களில் சில இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பை ஒட்டியே காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.