நாடு முழுவதும் அமலுக்கு வந்தது... இன்று முதல் புற்றுநோய் மருந்துகளின் விலை 60% வரை குறைந்தது!
இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சைச் செலவு மற்றும் மருந்துகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், புற்றுநோய் நோயாளிகளுக்குப் பெரும் ஆறுதல் அளிக்கும் வகையில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையைக் கணிசமாகக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விலை குறைப்பு நடவடிக்கை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. 1,000-க்கும் மேற்பட்ட புற்றுநோய் மருந்துகளின் விலைகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன.
இதில் 600-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய மருந்துகளின் விலை அதிகபட்சமாக 96.45% வரை குறைக்கப்பட்டு சாமானிய மக்களும் வாங்கும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த சிறப்புமிக்க நடவடிக்கையால் இந்திய மக்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ₹3,502 கோடிக்கும் அதிகமான தொகை சேமிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்பு ₹40,000 வரை விற்கப்பட்ட சில முக்கிய புற்றுநோய் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் தற்போது சுமார் ₹2,700 என்ற மிகக் குறைந்த விலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
மார்பகப் புற்றுநோய் மருந்து (Palbociclib) ஒரு பாக்கெட் விலை ₹40,421-ல் இருந்து அதிரடியாகக் குறைக்கப்பட்டு இனி ₹2,720-க்குக் கிடைக்கும்.
மார்பகப் புற்றுநோய்க்குப் பயன்படுத்தப்படும் அனஸ்ட்ரோசோல் (Anastrozole) 10 மாத்திரைகளின் விலை ₹695.76-ல் இருந்து ₹73 ஆகக் குறைந்துள்ளது.
கீமோதெரபி சிகிச்சைக்குப் பயன்படும் கீமோதெரபி மருந்து (Thiotepa) மாத்திரையின் ஒரு குப்பி விலை ₹80,072-ல் இருந்து ₹7,150 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
புல்பிராக்கா & டாப்ருமாப் ஊசி மருந்துகள் RPG லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் புல்பிராக்கா ஊசி மருந்து ₹26,072.16-ல் இருந்து ₹5,491 ஆகவும், டாப்ருமாப் ஊசி மருந்து ₹22,031.25-ல் இருந்து ₹5,941 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அபோட் நிறுவனத்தின் பெவாசிசுமாப் ஊசி மருந்து ₹22,031.25-ல் இருந்து ₹5,930.13 ஆகவும், டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தின் அசாசிடிடின் ஊசி மருந்து ₹6,337-ல் இருந்து ₹1,495.04 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
டசானத் 20 (Dasatinib): 60 மாத்திரைகள் கொண்ட தொகுப்பின் விலை ₹2,812.50-ல் இருந்து ₹1,085.93 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளின் விலை பல மடங்கு குறைக்கப்பட்டுள்ளதால், லட்சக்கணக்கான நோயாளிகளும் அவர்தம் குடும்பத்தினரும் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.