“தொகுதி மறுவரையறை மசோதாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முக்கியத்துவம்: தமிழ்நாட்டில் தொகுதிகள் 59-ஆக அதிகரிப்பு” - மத்திய சட்ட அமைச்சர் உறுதி!

 

தொகுதி மறுவரையறை முன்மொழிவில் வடக்கு, தெற்கு எனப் பாகுபாடின்றி நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இடங்களின் விகிதாச்சாரம் பராமரிக்கப்படும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் உறுதியளித்துள்ளார். இதன்படி, தமிழ்நாட்டில் தற்போதுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 59 தொகுதிகளாக அதிகரிக்கும் என அவர் வெளியிட்டுள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால், "தொகுதி மறுவரையறை முன்மொழிவின் நேர்மறையான அம்சம் என்னவென்றால், அது மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இடங்களின் விகிதத்தைப் பராமரிக்க முயல்கிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் - அது தெற்கில் இருந்தாலும் சரி, வடக்கில் இருந்தாலும் சரி—உரிய முக்கியத்துவம் உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்கும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்குமான பிரதிநிதித்துவத்தில் சமநிலையைப் பராமரிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தென் மாநிலங்களில் தற்போது உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை, இனி அதிகரிக்க உள்ள எண்ணிக்கை மற்றும் அதற்கான விகிதாச்சாரம் தொடர்பான அட்டவணையையும் மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார்:

தற்போது 7.18 சதவீத விகிதாச்சாரத்தில் உள்ள 39 தொகுதிகள், இனி 7.23 சதவீத விகிதாச்சாரத்துடன் 59 தொகுதிகளாக அதிகரிக்கும். கர்நாடகாவின் தற்போதைய 5.15 சதவீத விகிதாச்சாரம் அதே நிலையில் தொடர, தொகுதிகளின் எண்ணிக்கை 28-லிருந்து 42-ஆக அதிகரிக்கும் என அவ்வட்டவணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.