"2009-லேயே விஜய்க்கு தலைவர் பதவியை கொடுக்க முன்வந்தேன்" - கே.வி. தங்கபாலு பேட்டி!

 

நடிகர் விஜய் நீண்ட காலத்திற்கு முன்பே காங்கிரஸில் இணைய விரும்பினார் என்றும், ஆனால் அப்போதைய தலைவர்கள் அதனைத் தடுத்துவிட்டனர் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்த கருத்துகளுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டிலேயே விஜய்க்கு மாநில தலைவர் பதவியைக் கூட விட்டுக் கொடுக்கத் தான் முன்வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியுடன் அவருக்கு இருந்த தொடர்புகள் குறித்துப் பேசியுள்ள கே.வி. தங்கபாலு, அப்போதைய அரசியல் சூழல் மற்றும் தேசியத் தலைமையிடம் தான் எடுத்த முயற்சிகள் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகர் விஜய் டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்தித்த போது உடனிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள தங்கபாலு, அந்தச் சந்திப்பின் முக்கிய அம்சங்களை நினைவு கூர்ந்துள்ளார். அப்போது விஜய்க்கு அகில இந்திய அளவில் அல்லது மாநில அளவில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்கலாம் என்று தான் பரிந்துரை செய்ததாக அவர் கூறியுள்ளார்.

பதவிகள் வழங்குவது குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகவும், அதையும் தாண்டித் தேவைப்பட்டால் தனது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியைக் கூட விஜய்க்காக விட்டுக் கொடுக்கத் தயார் என்று அப்போது தேசியத் தலைமையிடம் தான் வெளிப்படையாகத் தெரிவித்ததாகவும் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த காலத்தில் இருந்த நெருக்க்கங்கள் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு அளித்துள்ள இந்த விளக்கம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.