2011-2016ல் ₹50,301 கோடி மின்வாரிய நஷ்டம் - திமுக ஆட்சியையும் சேர்த்து வாரிய அமைச்சர் நிர்மல்குமார்!

 

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 21 ஆண்டுகாலப் புள்ளிவிவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை இன்று  காலை வெளியிட்ட மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார், கடந்த கால அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும் மின்சாரத் துறையில் அரங்கேறியுள்ள நிர்வாகச் சீர்கேடுகளைப் புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். மின்சார வாரியம் தற்போது ₹2,47,130 கோடி மகா கடன் சுமையில் மூழ்கியுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், அதற்கான முக்கியக் காரணங்களை அவர் அடுக்கடுக்காகப் பட்டியலிட்டார்.

கடந்த 2011 முதல் 2016 வரையிலான அஇஅதிமுக ஆட்சிக் காலத்தை விமர்சித்த அமைச்சர் நிர்மல்குமார், அந்த 5 ஆண்டு காலத்தில் மட்டும் மின்சாரத் துறையில் ஏற்பட்ட நஷ்டம் ரூ.50,301 கோடி என்று அதிர வைக்கும் தகவலை வெளியிட்டார். முறையற்ற திட்டமிடல் மற்றும் நிதி மேலாண்மை இன்மையே இவ்வளவு பெரிய நஷ்டத்திற்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதிமுக ஆட்சியை மட்டுமன்றி, கடந்த 2021 முதல் 2026 வரையிலான முந்தைய 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் செயல்பாடுகளையும் அமைச்சர் நிர்மல்குமார் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மின்சாரத் துறையில் மக்கள் பயன்பாட்டிற்காக எந்தவொரு புதிய மின் உற்பத்தித் திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை.

புதிய திட்டங்கள் ஏதும் இல்லாத போதிலும், மின்துறையின் ஒட்டுமொத்த செலவுகள் மட்டும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. கடந்த ஆட்சியில் மின்சாரத் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான எந்தவொரு ஆக்கப்பூர்வமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் குற்றம் சாட்டினார்.

மின்சார வாரியத்தின் மனிதவள மேலாண்மை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அமைச்சர் கவலையுடன் பகிர்ந்து கொண்டார். கடந்த கால தவறான கொள்கை முடிவுகளால், தமிழ்நாடு மின்சாரத் துறையின் பணியாளர் நியமன முறையானது சுமார் 30 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளதாக வெள்ளை அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் தெரிவித்தார்.