'6 மாதத்தில் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்' - ஆர்.எஸ்.பாரதி!

 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தவெக அரசு அமைந்துள்ள சூழலில், "இன்னும் 6 மாத காலத்தில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்" எனத் திமுக மூத்த தலைவர் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குத் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது பாணியில் சுவாரஸ்யமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.

தூத்துக்குடியில் நேற்று திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், "தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழல்கள் வேகமாக மாறி வருகின்றன. இன்னும் 6 மாத காலத்திற்குள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறுவார்" என குறிப்பிட்டார்.

தேர்தல் முடிந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த திடீர் பேச்சு திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த அரசியல் கணிப்பு குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்கள் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்களின் கேள்விக்குத் தனது வழக்கமான புன்னகையுடன் பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, "6 மாதத்தில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார் என்பது அனிதா ராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட ஆசை. ஒரு கட்சியின் மூத்த தலைவராக, தொண்டனாக அவருக்கு அந்த ஆசை இருப்பதில் தவறில்லை. அவரது அந்த ஆசைக்குக் குறுக்கே நான் நிற்க விரும்பவில்லை" என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

தமிழகத்தில் தவெக அரசு தனிப் பெரும்பான்மையை நோக்கி 'ஆபரேஷன் எல்' போன்ற வியூகங்களை அமைத்து வரும் வேளையில், திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சியின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருவது தற்போதைய அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.