“இந்தியாவில் Al என்றால் அனைவரையும் உள்ளடக்கியது என அர்த்தம்” - விவாடெக் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் விவாடெக் சர்வதேசத் தொழில்நுட்ப மாநாட்டில், ஐரோப்பியத் தொழில் முதலீட்டாளர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இம்மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த நாட்டின் தொலைநோக்கு பார்வையைப் பதிவு செய்தார்.

மாநாட்டில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "தற்போது உலகெங்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் AI என்றால் 'அனைவரையும் உள்ளடக்கியது' (All Inclusive) என்பதே அதன் உண்மையான அர்த்தம் ஆகும். நாட்டின் அடித்தட்டு மக்கள் வரை இந்தத் தொழில்நுட்பத்தின் பலன்கள் சென்றடைவதை நாங்கள் உறுதி செய்து வருகிறோம்."

"உலகிலேயே மிகவும் மலிவான கட்டணத்தில் அதிவேக இணைய சேவையை வழங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. இதுவே டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு மிக முக்கியக் காரணியாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளுக்குத் தேவையான ஆற்றலை, உலகிலேயே மிகவும் குறைந்த செலவில் மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மூலம் இந்தியா வழங்கி வருகிறது." தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், அவற்றை உலகளவில் வணிகமயமாக்கவும் இந்திய அரசு எடுத்துள்ள  பொருளாதார இலக்கு குறித்துப் பிரதமர் விளக்கினார்.

"இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அதிநவீனத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை (இன்னோவேஷன்ஸ்) சர்வதேச அளவில் வணிகமயமாக்குவதற்காக, தனியார் நிறுவனங்களுக்குச் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.41,000 கோடிக்கும் அதிகம்) ஊக்கத்தொகையாக வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்."

ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக விவாடெக் அரங்கில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியா தற்போது முதலீடுகளுக்குப் பன்னாட்டளவில் மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான தளமாக உருவெடுத்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, முன்னெப்போதையும் விட அதிவேகமாகப் பொருளாதார மற்றும் தொழில்நுட்பப் பாதையில் முன்னேறிச் செல்வோம்" என ஐரோப்பியத் தொழில் அதிபர்களுக்குத் தனது உரையின் நிறைவாக அழைப்பு விடுத்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்புகள் மற்றும் ஊக்கத்தொகை இலக்கு, இந்தியத் தொழில்முனைவோர் மற்றும் சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.