"சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும்!" - விஜய் அரசுக்கு எடப்பாடி அட்வைஸ்
தமிழகச் சட்டப்பேரவையில் 2026-27 நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் நிதி மேலாண்மை, கடன் சுமை மற்றும் உள்கட்டமைப்பு குறித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தமிழகத்திற்கான நிதி உரிமைகளைப் பெற மத்திய அரசுக்குக் கடிதம் மட்டும் எழுதினால் போதாது; நேரில் சென்று உரிமையோடு பேச வேண்டும் என வலியுறுத்தினார். "பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், சில முக்கியமான இடங்களில் பேசித்தான் தீர்வு காண முடியும்" என்று தவெக அரசுக்கு அறிவுறுத்தினார்.
புதிய அரசு பொறுப்பேற்ற 3 மாதங்களிலேயே ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகள் முடிவில் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என எச்சரித்தார்.
இடைக்கால அறிக்கையை விடத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சொந்த வரி வருவாய் ரூ.2,839 கோடி குறைந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். தற்போதைய நிலையில் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் சுமை ரூ.13 லட்சம் கோடியாக உள்ளதாகவும், வட்டிச் சுமை மற்றும் வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 100% பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசு பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் 'உழவன் செயலி' திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குறிப்பிட்ட கிலோமீட்டர்களையும் ஆண்டுகளையும் கடந்த பழைய பேருந்துகளே தற்போது இயங்கி வருகின்றன. அவற்றை முழுமையாக ஏசி பேருந்துகளாக மாற்றுவது சாத்தியமில்லை எனக் குறிப்பிட்ட அவர், சாதாரணப் புதிய பேருந்துகளை மாற்றிக் கொடுத்தாலே மக்கள் பாராட்டுவார்கள் என்றார்.
ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தொழில்வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்க புதிய விமான நிலையங்கள் மிக அவசியம் எனத் தெரிவித்தார்.