தமிழகத்தில் 4,887 ஏரிகள் வறண்டது.. 18 மாவட்டங்களில் வறட்சி... தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்!

 

தென்மேற்குப் பருவமழை இயல்பை விடக் குறைவாகப் பெய்துள்ளதாலும், கர்நாடகத்திடம் இருந்து பெற வேண்டிய காவிரி நீரின் நிலுவை அதிகரித்துள்ளதாலும் தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள 14,141 ஏரிகளில், போதிய மழையின்மை காரணமாக தற்போது 4,887 ஏரிகள் முற்றிலும் வறண்டு கிடக்கின்றன.

கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரின் நிலுவை 78.9 டி.எம்.சி-யாக அதிகரித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் சென்னை, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.