திரைப்பட பாணியில், திருமண மேடையில் காதலனை கரம் பிடித்த காதலி... அதிர்ந்த உறவினர்கள்!

 

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணப்பெண் தனது காதலனுடன் கரம் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரணாசியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்குப் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் கோலாகலமாகத் தொடங்கியது. மணமேடையில் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது மணப்பெண்ணின் காதலர் திடீரென திருமண மண்டபத்திற்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டார். பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்து அந்த இளைஞரைத் தாக்கத் தொடங்கினர். தனது காதலன் தாக்கப்படுவதைக் கண்ட மணப்பெண், சற்றும் யோசிக்காமல் திருமண மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, காதலனைப் பாதுகாத்தார்.

பெரியவர்கள் முன்னிலையில் மணப்பெண் தனது காதலைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். தாங்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் உறுதிபடத் தெரிவித்தார். மணப்பெண்ணின் இந்த அதிரடி முடிவைக் கண்ட மணமகன் மற்றும் அவரது வீட்டார், திருமணத்திலிருந்து தாமாக முன்வந்து விலகிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் ஊர் பெரியவர்கள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பெண்ணின் உறுதியான முடிவை அடுத்து, அவரது குடும்பத்தினர் காதலர்களுக்கே திருமணம் செய்து வைக்கச் சம்மதித்தனர். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை மாலை அதே திருமண மண்டபத்தில், அதே காதலனுடன் அந்தப் பெண்ணிற்கு முறைப்படி திருமணம் நடைபெற்றது.

நிச்சயிக்கப்பட்ட மணமகனைத் தவிர்த்து, தனது காதலனைத் திருமண நாளில் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண் கரம் பிடித்தது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.