தொடர் மழை.. வரத்து குறைவு.. பூக்கள் விலை இருமடங்காக உயர்வு!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாகத் தோவாளை மலர் சந்தைக்குப் பூக்களின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாகப் பூக்களின் விற்பனை விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தின் புகழ்பெற்ற மலர் சந்தைகளில் ஒன்றான தோவாளை மலர் சந்தைக்குத் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படும். கடந்த சில நாட்களாகக் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் பூந்தோட்டங்களில் இறங்கிப் பூக்களைப் பறிக்க முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலர் சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. வரத்து குறைவு மற்றும் பண்டிகைக் காலத் தேவை காரணமாகச் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மல்லிகைப் பூ வழக்கமாக ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனையான மல்லிகைப் பூ, தற்போது இருமடங்காக உயர்ந்து கிலோ ரூ.2,000-க்கு விற்பனையாகி வருகிறது. சந்தையில் பிச்சிப் பூவின் விலை உயர்ந்து தற்போது ஒரு கிலோ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவாலும் விலை உயர்வாலும் பூ வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுப நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.