ஓடும் பேருந்தில் அநாகரிகச் செயல்.. .பெண்கள் முன்னிலையில் சுயஇன்பத்தில் ஈடுபட்ட நபர்!
மத்தியப் பிரதேசத்தில் ஓடும் ஆம்னி பேருந்து ஒன்றில் பெண்கள் முன்னிலையில் அநாகரிக முறையில் சுயஇன்பத்தில் ஈடுபட்ட நபர், பெண்களிடம் தர்ம அடி வாங்கியதோடு போலீசாராலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு இயங்கி வரும் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில் பெண்கள் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பேருந்தில் பயணித்த ஒரு நபர், இரண்டு பெண்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு மிக அருகில் வந்து, எவ்வித பயமும் இன்றி அநாகரிகமான முறையில் சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்நபரின் இந்த அருவருக்கத்தக்கச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், சற்றும் பயப்படாமல் ஆத்திரமடைந்து அவரைப் பிடித்துச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். மேலும், தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகப் பேருந்திற்குள்ளேயே அவரைப் பளாரென அறைந்து தர்ம அடி கொடுத்தனர். அங்குப் பயணித்த சக பயணியால் மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
பெண்களிடம் அடி வாங்கி அலறிய அந்த அநாகரிக நபரை, பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகளின் உதவியுடன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்நபர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத வகையில் இவ்வளவு தரம்தாழ்ந்த முறையில் நடந்துகொண்ட அந்த நபரை நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வன்மையாகக் கண்டித்துத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், அநாகரிக நபருக்குப் பயப்படாமல் தகுந்த பாடம் புகட்டிய பெண்களின் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.