சுதந்திர தின விழா: முதல்வர் விஜய் செல்லும் பாதை 'சிவப்பு மண்டலமாக’ அறிவிப்பு; டிரோன்கள் பறக்கத் தடை!
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளம் மற்றும் முதலமைச்சர் விஜய் செல்லும் வழித்தடங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகச் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்குச் செல்லும் வழித்தடம் மற்றும் தலைமைச் செயலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆகஸ்டு 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் பிற வான்வழி உபகரணங்கள் பறக்கக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு ஒத்திகைகள் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
சுதந்திர தினத்தன்று புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றும் தமிழகத்தின் 7-வது முதலமைச்சர் என்ற பெருமையை இவர் பெறுகிறார். தமிழ்நாட்டிற்கும் தமிழின வளர்ச்சிக்கும் மிகச்சிறந்த பங்காற்றிய பெருமகனாருக்கு 'தகைசால் தமிழர் விருது' வழங்கப்படவுள்ளது (விருதுத் தொகை ரூ.10 லட்சம், பாராட்டுச் சான்றிதழ்).
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது மற்றும் மாநில இளைஞர் விருதுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் நலனுக்காகச் சிறப்பாகச் சேவையாற்றிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன.