ஆதவ் அர்ஜுனாவுக்கு ‘செக்’ வைத்த சுயேட்சை வேட்பாளர் - தகுதி நீக்கம் செய்யக் கோரிக்கை - தவெக வட்டாரத்தில் பரபரப்பு!
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முக்கிய முகமாகவும், நட்சத்திரப் பேச்சாளராகவும் வலம் வரும் ஆதவ் அர்ஜுனா, தற்போது ஒரு புதிய சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாக அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் பிரசாரத்தின் போது, பள்ளி மாணவர்களும் சிறுவர், சிறுமியர்களும் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுயேட்சை வேட்பாளரான அசோக்குமார் என்பவர் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக மனு அளித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிகளை மீறி, குழந்தைகளை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தியது சட்டப்படி குற்றம் என அவர் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தை முன்வைத்து அசோக்குமார் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட ஆதவ் அர்ஜுனா தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும். அவரை வேட்பாளர் தகுதியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும். குழந்தைகள் நலச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்துள்ளார்.
தேர்தல் பிரசாரங்கள், போஸ்டர் ஒட்டுதல் அல்லது கட்சிப் பேரணிகளில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனை மீறினால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது கட்சி நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வழிவகை உள்ளது.
ஏற்கனவே வேட்பாளர் தலைமறைவு, கட்சித் தாவல் எனப் பல புகார்களில் தவெக சிக்கியுள்ள நிலையில், தற்போது இந்த ‘குழந்தை தொழிலாளர்’ புகார் கட்சியின் பெயருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. இது குறித்து ஆதவ் அர்ஜுனா தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை.