இந்தியா - இந்தோனேசியா இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்து - பிரமோஸ் ஏவுகணை, யுபிஐ பரிவர்த்தனைக்கு ஒப்புதல்!
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியான்டோவிற்கும் இடையேயான இருதரப்புப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இரு நாடுகளின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் 20 முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய முடிவுகள் இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பிரமோஸ் மற்றும் அஸ்த்ரா-MK1 ஆகிய ஏவுகணைகளை இந்தியாவிடமிருந்து வாங்குவதற்கு இந்தோனேசியத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியான 'யுபிஐ' பணப்பரிவர்த்தனை சேவைகளை இந்தோனேசியாவிலும் இணைப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இருதரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகள் மட்டுமன்றி கல்வி மற்றும் கடல்சார் கண்காணிப்பிலும் புதிய உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தியக் கல்வித் தரத்தை சர்வதேச அளவிற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக, இந்தோனேசியாவில் பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் புதிய கிளை வளாகத்தைத் திறக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்திய மற்றும் இந்தோனேசியக் கடலோரக் காவல் படைகள் இணைந்து கூட்டுப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த 20 முக்கிய ஒப்பந்தங்களும் இரு நாடுகளின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சியைப் புதியதொரு உயரத்திற்குக் கொண்டு செல்லும் என இருநாட்டுத் தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.