3 பிரிவிலும் தங்கம்... இந்திய வில்வித்தை அணிகள் வரலாற்று சாதனை!
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வில்வித்தை அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. காம்பவுண்ட் வில்வித்தையின் ஆடவர், மகளிர் மற்றும் கலப்பு அணி என மூன்று பிரிவுகளிலும் இந்தியா தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
முதலில் மகளிர் காம்பவுண்ட் அணி தங்கம் வென்றது. ஜோதி சுரேகா வென்னம், சிகிதா தனிபார்த்தி, பிரித்திகா பிரதீப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவை 238-234 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இந்த வெற்றி உலக சாதனைக்கு இணையான 238 புள்ளிகள் என்ற ஸ்கோரையும் பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து கலப்பு காம்பவுண்ட் அணியிலும் இந்தியா தங்கம் வென்றது. சாஹில் ஜாதவ் மற்றும் சிகிதா தனிபார்த்தி இணைந்த இந்திய ஜோடி இறுதிப்போட்டியில் தென்கொரியாவை ஷூட்-ஆஃப் முறையில் வீழ்த்தி முதலிடம் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒதுக்கீட்டு இடமும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், ஆடவர் காம்பவுண்ட் அணி தங்கம் வென்று இந்தியாவின் தங்க வேட்டையை நிறைவு செய்துள்ளது. சாஹில் ஜாதவ், குஷால் தலால் மற்றும் கணேஷ் மணி ரத்னம் திருமுரு ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இதற்கு முன்பு அரையிறுதியில் இந்திய அணி தென்கொரியாவை 236-229 என்ற புள்ளிக்கணக்கில் வென்றிருந்தது.
இதன் மூலம் 2026 ஆசிய விளையாட்டில் காம்பவுண்ட் வில்வித்தையின் மூன்று அணிப் பிரிவுகளிலும் இந்தியா தங்கம் வென்றுள்ளது. கடந்த 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டிலும் இந்தியா இந்த மூன்று பிரிவுகளில் தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த சாதனையைத் தக்க வைத்துள்ளது.இந்திய வில்வித்தை அணியின் இந்த தொடர்ச்சியான வெற்றிகள், ஆசிய விளையாட்டில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையிலும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.