இன்று இந்தியாவில் 444 விமானங்கள் ரத்து... பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, இந்திய விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள், அதனைத் தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதில் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கின் வான்வெளிப் பகுதிஅபாயகரமாக மாறியுள்ளது. இதனால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானச் சேவைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று சுமார் 444 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ட் தெரிவிக்கப்பட்டுள்ளது. வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று மட்டும் 410 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால், அந்த வான்வழியைப் பயன்படுத்தும் விமானங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன அல்லது ரத்து செய்யப்படுகின்றன.
விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் அமைச்சகம், பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பாக, அந்தந்த விமான நிறுவனங்களின் இணையதளம் அல்லது செயலி மூலம் தங்களது விமானத்தின் தற்போதைய நிலையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பயணிகளின் புகார்கள் மற்றும் சந்தேகங்களைத் தீர்க்க அமைச்சகத்தின் 'பயணிகள் உதவி கட்டுப்பாட்டு அறை' தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நேற்று மட்டும் ஏர்சேவா மூலம் 216 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை தீர்க்கப்பட்டுள்ளன.
வான்வெளித் தடையால் சர்வதேச விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், பயண நேரம் அதிகரிக்கவும், எரிபொருள் செலவு காரணமாக விமானக் கட்டணங்கள் உயரவும் வாய்ப்புள்ளது. முக்கிய விமான நிலையங்களில் பயணிகளின் கூட்டத்தை மேலாண்மை செய்யவும், விமானங்களைத் திசைதிருப்ப வேண்டிய சூழலில் அவற்றைச் சரியாகக் கையாளவும் மூத்த அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சர்வதேசச் சூழலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றுமாறு விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் இந்தப் போர் பதற்றம் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.