8வது முறையாக இந்தியா சாம்பியன்... மகளிர் ஆசிய கோப்பைப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது! 

 

துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

துபை சர்வதேசத் திடலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளாகக் களமிறங்கிய ஷஃபாலி வர்மா 39 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 68 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 59 ரன்களும் விளாசி சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அவர்களைத் தொடர்ந்து ரிச்சா கோஷ் 17 ரன்களும், கமலினி 15 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 ரன்களும் சேர்த்தனர்.

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அட்டப்பட்டு 36 ரன்களும், விஷ்மி குணரத்னே 20 ரன்களும் எடுத்தனர். எனினும், கடுமையான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய அந்த அணி 20 ஓவர்களில் 111 ரன்களுக்குச் சுருண்டது.

இந்தியத் தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி 4 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதன் மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா, கடந்த 2024-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இலங்கையிடம் கண்ட தோல்விக்குச் சரியான பதிலடி கொடுத்துள்ளதுடன், ஆசிய கோப்பையைக் கைப்பற்றுவது இது 8-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. (ஏற்கனவே 2004, 2005-06, 2006, 2008, 2012, 2016 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் இந்தியா கோப்பையை வென்றுள்ளது).