பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் இடிப்பு - இந்தியா கடும் கண்டனம்!
பாகிஸ்தானில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து கோவில் ஒன்று இடிக்கப்பட்ட விவகாரத்திற்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம், லாகூரிலிருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ள நரோவால் மாவட்டத்தின் சிராஜ் கிராமத்தில், சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்து கோவில் ஒன்று இயங்கி வந்தது. அந்தப் பழமையான கோவில் அமைந்துள்ள நிலத்தில் மதரஸா கட்டுவதற்காக, அது ஆக்கிரமிக்கப்பட்டு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்திற்குத் கண்டனம் தெரிவித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளம் மீது நடத்தப்பட்டுள்ள இந்த வன்முறைச் செயல் மிகுந்த கவலையளிப்பதாகத் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அரசு உடனடியாக இது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இடிக்கப்பட்ட கோவிலை உடனடியாகச் சீரமைத்துச் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில்வலியுறுத்தப்பட்டுள்ளது.