“இந்தியா உண்மையான நண்பன்!” - ஈரானுக்கு 2-வது கட்ட மருத்துவ உதவிக்கு தூதர் முகமது பதாலி நெகிழ்ச்சி - 40 டன் மருந்துகள் வழங்கி அசத்தல்!

 

அமெரிக்காவுடனான போர் காரணமாகப் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் ஈரானுக்கு, இந்தியா தொடர்ந்து தனது மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய மக்கள் மற்றும் அரசாங்கம் காட்டிய பேரன்பிற்கு ஈரானிய தூதர் முகமது பதாலி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர், ஈரானில் பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது: இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 27,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சூழலில், ஈரானில் உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஈரான் தூதரகம், இந்திய மக்களிடமிருந்து பெறப்பட்ட தன்னார்வ நன்கொடைகளைக் கொண்டு 40 டன் மருந்துகளைத் தயாரித்துள்ளது. கடந்த மாதம் 18-ஆம் தேதி முதற்கட்ட மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது தொகுப்பு மருந்துகள் இன்று இந்தியாவில் இருந்து ஈரானிய செம்பிறை சங்கத்திற்குவெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது பதாலி கூறுகையில், "ஈரான் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும்போது, இந்திய மக்கள் காட்டிய மனிதாபிமான உதவி மறக்க முடியாதது. கடினமான காலங்களில் இந்தியர்கள் ஒரு நம்பகமான மற்றும் இரக்கமுள்ள கூட்டாளிகள் என்பதை இந்த முயற்சி உலகிற்கு நிரூபித்துள்ளது. இந்த உதவிகளைச் செய்ய உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த இந்திய அரசாங்கத்திற்கு எனது நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஈரான் மக்களுக்காக இந்தியா காட்டி வரும் இந்த மனிதாபிமானப் பார்வை, இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார மற்றும் வரலாற்று உறவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.