“உலக அரங்கில் கடல்சார் வல்லரசு நாடாக உருவெடுத்து வருகிறது இந்தியா!” - மத்திய அமைச்சர் பெருமிதம்!
"மத்திய அரசின் தொடர் உத்திகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் காரணமாக, இந்தியா கடல்சார் துறையில்அசுர வேகத்தில் முன்னேறி, உலக அளவில் ஒரு முக்கியக் கடல்சார் வல்லரசு சக்தியாக உருவெடுத்து வருகிறது" என மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களின் உள்கட்டமைப்புகள் சர்வதேசத் தரத்திற்கு இணையாக நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. சரக்குகளைக் கையாளும் திறன் மற்றும் கப்பல்கள் வந்து செல்லும் வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்நாட்டிலேயே கப்பல் கட்டும் தொழில் மற்றும் கடல்சார் உபகரணங்கள் உற்பத்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய சந்தையில் இந்தியாவின் போட்டித்திறனைப் பலப்படுத்தியுள்ளது. செலவு குறைந்த மற்றும் சுற்றச்சூழலுக்கு உகந்த உள்நாட்டு நீர்வழிச் சரக்குப் போக்குவரத்து (Inland Waterways) கணிசமான வளர்ச்சி கண்டுள்ளது. இது உள்நாட்டு வர்த்தகத்தை எளிதாக்கியுள்ளது.
இந்தியாவின் கடல்சார் புவியியல் அமைப்பைப் பொருளாதாரப் பலமாக மாற்றி வருவதைக் குறிப்பிட்ட அமைச்சர், "உலகளாவிய நீலப் பொருளாதாரத்தில் இந்தியா முன்னணி இடத்தை வகிப்பதற்கான அனைத்துத் திட்டங்களும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடல்சார் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நவீன மாற்றங்கள், இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த கடல்சார் வர்த்தக மையமாக மாற்றுவதுடன், தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தூணாக அமையும்" என்று அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச அளவில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகப் பாதைகளை மேம்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து வரும் வேளையில், மத்திய அமைச்சரின் இந்த அறிக்கை இந்தியாவின் கடல்சார் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.