அரபிக்கடலில் இந்தியா - பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்! தூதரை அழைத்து இந்தியா கடும் எதிர்ப்பு!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படை பிரிவுகளைச் சேர்ந்த கப்பல்கள் வடக்கு அரபிக்கடலில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயரதிகாரியை அழைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. வடக்கு அரபிக்கடலில் இந்திய கடற்படை கப்பலும், பாகிஸ்தான் கடற்படை பிரிவைச் சேர்ந்த கப்பல்களும் மோதியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த மோதலில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. உயிரிழப்பு அல்லது பெரிய காயங்கள் குறித்த தகவலும் தற்போது வெளியாகவில்லை.
இந்த சம்பவத்தை இந்தியா “ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற நடவடிக்கை” எனக் குறிப்பிட்டுள்ளது.மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க பாகிஸ்தான் தனது ராணுவப் பிரிவுகள் கடலில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பதில் என்ன?
இந்திய வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தான் தூதரகத்தின் உயரதிகாரியை அழைத்து எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அதேபோல், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இந்த விவகாரம் குறித்து எதிர்ப்பை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசின் உடனடி பதில் எதுவும் வெளியாகவில்லை என தெரிவித்துள்ளது.இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்கனவே நிலவி வரும் பதற்றமான சூழலில், அரபிக்கடலில் இரு நாடுகளின் கடற்படை கப்பல்கள் மோதியிருப்பது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.