இந்தியாவில் வறுமை விகிதம் அதிரடி சரிவு: 12 ஆண்டுகளில் 49.6 கோடி பேர் முன்னேற்றம்!
இந்தியாவில் வறுமை விகிதம் கடந்த 12 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கியின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. 2011-12-ம் ஆண்டில் 27.1 சதவீதமாக இருந்த தீவிர வறுமை விகிதம், 2023-24-ம் ஆண்டில் 2.6 சதவீதமாகச் சரிந்துள்ளது.
உலக வங்கியின் அக்டோபர் 2026 வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையின்படி, ஒரு நபரின் தினசரி நுகர்வு செலவு 3 அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருப்பது தீவிர வறுமைக்கான அளவுகோலாகக் கணக்கிடப்படுகிறது. இந்த அடிப்படையில், இந்தியாவில் தீவிர வறுமையில் இருப்போர் எண்ணிக்கை சுமார் 3.5 கோடியாகக் குறைந்துள்ளது.
அதேவேளையில், குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான வறுமை அளவுகோலான தினசரி 4.20 டாலருக்குக் கீழ் வாழ்வோர் விகிதமும் 2011-12-ல் 57.7 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24-ல் 16.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த அளவுகோலின்படி சுமார் 49.6 கோடி பேர் வறுமை நிலையிலிருந்து மீண்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
நுகர்வு அதிகரிப்பு, வேலைவாய்ப்பு வளர்ச்சி, குறிப்பாக பெண்களின் வேலைப் பங்கேற்பு மற்றும் உணவு மானியம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்கள் வறுமைக் குறைப்புக்குப் பங்களித்துள்ளன.இருப்பினும், வேலைவாய்ப்பின் தரம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டிய சவால்களாக உள்ளன.