சர்வதேச பாஸ்போர்ட் குறியீடு:  125-வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா... ஆசியாவில் சிங்கப்பூர் மட்டுமே டாப் 10

 

குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனமான 'குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ்' வெளியிட்டுள்ள 5-வது ஆண்டு 'சர்வதேசப் பாஸ்போர்ட் குறியீடு 2026' தரவரிசைப் பட்டியலில், இந்தியப் பாஸ்போர்ட் உலகளவில் 125-வது இடத்தைப் பிடித்துள்ளது.

வெறும் விசா இல்லாத பயணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு போலல்லாமல், இந்தச் சர்வதேசப் பாஸ்போர்ட் குறியீடு ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டின் ஒட்டுமொத்த மதிப்பை மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் கணக்கிடுகிறது.

கடந்த 2025-ஆம் ஆண்டின் ஒட்டுமொத்தத் தரவரிசையில் 124-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை ஒரு இடம் பின்வாங்கி 125-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. பட்டியலில் நமக்கு முன்னதாக நமீபியா 124-வது இடத்திலும், நமக்கு அடுத்ததாக அஜர்பைஜான் 126-வது இடத்திலும் உள்ளன.

தரவரிசையில் ஒரு இடம் சரிந்திருந்தாலும், இந்தியாவின் ஒட்டுமொத்தக் கூட்டுப் புள்ளியானது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 45.1 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 2021-ஆம் ஆண்டின் (127-வது இடம்) தரவரிசையோடு ஒப்பிடுகையில் நீண்டகால அடிப்படையில் இந்தியா இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.

ஒட்டுமொத்தத் தரவரிசையைத் தீர்மானிக்கும் 14 முக்கியக் காரணிகளை உள்ளடக்கிய மூன்று முதன்மைப் பிரிவுகளில்  சர்வதேசப் பயணச் சுதந்திரம் மற்றும் செல்லும் நாடுகளின் தரம் ஆகியவற்றைக் கணக்கிடும் இப்பிரிவில் இந்தியா 136-வது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பூட்டான், நேபாளம், ஜமைக்கா, மக்காவ் உள்ளிட்ட 26 நாடுகளுக்கு விசா இல்லாமலோ அல்லது வருகைக்கான விசா மூலமாகவோ பயணிக்க முடியும். ஆனால், அமெரிக்கா, லண்டன், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 88 நாடுகளுக்கு விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், கல்வி, தனிநபர் பாதுகாப்பு ஆகியவற்றைக் கணக்கிடும் இப்பிரிவில், கடந்த ஆண்டை விட இந்தியா 11 இடங்கள் அதிரடியாக முன்னேறி 118-வது இடத்தைப் பிடித்துப் சாதனை படைத்துள்ளது. நாட்டின் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வரி விதிப்புகளைக் கணக்கிடும் இப்பிரிவில், இந்தியா 3 இடங்கள் முன்னேறி 94-வது இடத்தை எட்டியுள்ளது.

இந்தச் சர்வதேசப் பட்டியலில் 96.05 புள்ளிகளுடன் ஸ்வீடன் முதலிடத்தைப் பிடித்து உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

உலகளாவிய அளவில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில் 9 நாடுகள் ஐரோப்பிய நாடுகளாக இருக்கும் வேளையில், ஆசியக் கண்டத்திலிருந்து சிங்கப்பூர் (10-வது இடம்) மட்டுமே இந்த டாப் 10 கௌரவப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே நாடாகும். முதலீட்டுத் திறனில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருந்தாலும், வாழ்க்கைத் தரப் புள்ளிகள் காரணமாக ஒட்டுமொத்தப் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியலின் இறுதி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.