21 தமிழர்கள் மீட்பு - நேபாளத்திற்கு 47.5 டன் நிவாரணப் பொருட்கள், பெய்லி பாலம் அனுப்புகிறது இந்தியா!

 

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கோரப் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் உட்படப் பலரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 200-ஐக் கடந்துள்ளதுடன், பலரைக் காணாமல் தேடும் பணியில் அவசரக்காலக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 யாத்ரீகர்கள் உட்படப் பல இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நேபாள நாட்டிற்கு இந்தியா சார்பில் 47.5 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் சேதமடைந்த போக்குவரத்து இணைப்புகளைச் சீரமைக்கும் வகையில், மாடுலர் எஃகுப் பலகைகளால் ஆன, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய மற்றும் முன்பே தயாரிக்கப்பட்ட நவீன 'பெய்லி' பாலத்தை நேபாளத்திற்கு இந்தியா வழங்கவுள்ளது.