உலகக் கோப்பை ஹாக்கியில் இன்று இந்தியா பாகிஸ்தானுடன் மோதல் - எகிறும் எதிர்பார்ப்பு!
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாரம்பரிய எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆனால், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. தற்போது 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 2-வது சுற்றுக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தைக் குறைந்தபட்சம் டிரா செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 3-3 என டிரா செய்து, இங்கிலாந்திடம் 1-4 எனத் தோற்ற பாகிஸ்தான் அணி 1 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. இதனால், 2-வது சுற்றுக்குச் செல்ல இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கடும் நெருக்கடியுடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற புரோ லீக் தொடரில் பாகிஸ்தானை 7-1 மற்றும் 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்திருந்தது.
பாகிஸ்தான் அணி கடைசியாக 2016-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில்தான் இந்தியாவை வீழ்த்தியது. மேலும், உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் கடைசியாக 2010-இல் மோதியபோது இந்தியா 4-1 என வெற்றி பெற்றிருந்தது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று விளையாடும் 4 முறை சாம்பியனான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, 2-வது சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கையுடன் இந்திய அணி இன்று மாலை 6.30 மணிக்கு ஆம்ஸ்டல்வீன் மைதானத்தில் விளையாடுகிறது.