ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி... நாளை இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை! கோப்பையை வெல்லப்போவது யார்?
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை (நவம்பர் 14) மோதுகின்றன. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வரும் 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் லக்ஷயா ராய்சந்தானி 93 ரன்களும், ஆர்யவீர் சேவாக் 51 ரன்களும், வி.கே. வினீத் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் எடுத்தனர்.
மற்றொரு அரையிறுதியில் வங்காளதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இரு அணிகளும் ஏற்கனவே லீக் சுற்றில் மோதியபோது பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே, அந்தத் தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்திய இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர்.
இறுதிப்போட்டி நாளை காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று ஆசிய சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.