உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு 84,00,000 டிக்கெட் விண்ணப்பங்கள் குவிந்து சாதனை!
2027-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரலாறு காணாத வரவேற்பு கிடைத்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள 34,000 இருக்கைகள் மட்டுமே கொண்ட வரலாற்றுப் புகழ்பெற்ற வாண்டரர்ஸ் மைதானத்தில் அக்டோபர் 10, 2027 அன்று நடைபெறவுள்ள இப்போட்டிக்காக, இதுவரை 83,97,294 (சுமார் 84 லட்சம்) டிக்கெட் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
தொடர் முழுவதும் நடைபெறவுள்ள போட்டிகளுக்காக உலகெங்கிலும் உள்ள 193 நாடுகளிலிருந்து இதுவரை 12 கோடிக்கும் அதிகமான டிக்கெட் விண்ணப்பங்களை சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் பெற்றுள்ளது.
நவம்பர் 21 அன்று அதே மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு சுமார் 79 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், அதைவிட அதிகமாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி முதலிடத்தில் உள்ளது.
மைதானத்தின் கொள்ளளவை விடக் கோரிக்கைகள் பல மடங்கு அதிகமாக இருப்பதால், விண்ணப்பித்த ரசிகர்களுக்கு ஐசிசி கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் முறை மூலம் வெளிப்படையாக டிக்கெட்டுகளை ஒதுக்கீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. டிக்கெட் பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்க கண்டத்தில் உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ள நிலையில், போட்டிக்கு இன்னும் ஓராண்டுக்கு மேலிருக்கும்போதே இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது சர்வதேசக் கிரிக்கெட் வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.