பிஹு கொண்டாட்டத்தில் சோகம்: லாரி - மினி பேருந்து மோதியதில் பிரபல நடனக் கலைஞர் பலி!

 

அசாம் மாநிலம் தமுல்பூர் மாவட்டத்தில் உள்ள நோகடா பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு பயங்கர சாலை விபத்து நிகழ்ந்தது. நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த 'பாஸ்கர்ஜோதி பிஹு ஹுசோரி' (Bhaskarjyoti Bihu Husori) என்ற கலைக்குழுவினர், பிஹு பண்டிகையை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மினி பேருந்தில் (டிராவலர்) சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு டிரெய்லர் லாரி, இவர்களது வாகனத்தின் மீது நேருக்கு நேர் பயங்கர மோதியது.

allowfullscreen

இந்த கோர விபத்தில், அக்குழுவின் பிரபல பிஹு நடனக் கலைஞரான 25 வயது நிஷாமோனி ஹலோய் (Nishamoni Haloi) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இவருடன் பயணம் செய்த கலைஞர்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேல் சிகிச்சைக்காக கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நிஷாமோனி ஹலோய் பிஹு நடனத்தில் மட்டுமின்றி, பாரம்பரிய 'நகரா நாம்' (Nagara Naam) கலை வடிவத்திலும் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வளரும் கலைஞரின் அகால மரணம் அசாம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.