இந்தியாவுக்கு 12.5 சதவீதம் கூடுதல் வரி விதி... அமெரிக்கா பரிந்துரை!
அமெரிக்காவில் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் சிறைக்கைதிகள் உள்ளிட்ட கட்டாய உழைப்பைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க கடுமையான சட்டம் நடைமுறையில் உள்ளது. இத்தகைய கட்டாய உழைப்புப் பொருட்கள் தங்களின் சந்தைகளில் நுழைவதைத் தடுக்கத் தவறியதாகப் பல்வேறு உலக நாடுகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக இந்தியா உள்பட மொத்தம் 54 நாடுகள் மீது கூடுதலாக 10 முதல் 12.5 சதவீதம் வரை வர்த்தக வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி தற்போது பரிந்துரை செய்துள்ளார்.
இந்த அதிரடி பரிந்துரையின்படி அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் வைத்துள்ள கனடா, மெக்சிகோ, தைவான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளது. ஆனால் அமெரிக்காவுடன் அத்தகைய ஒப்பந்தம் இல்லாத இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு 12.5 சதவீத கூடுதல் வரி விதிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய வர்த்தக வரி விதிப்புப் பரிந்துரை உலகளாவிய ஏற்றுமதி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.