ஆசிய விளையாட்டுப் போட்டி 2026... காலிறுதிக்குத் தகுதி பெற்ற இந்தியா – இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோத வாய்ப்பு!

 

ஜப்பானில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 கிரிக்கெட் தொடரும் அரங்கேறவுள்ளது. ஆடவர் பிரிவில் தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாகக் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இவற்றைத் தவிர ஏ மற்றும் பி ஆகிய இரு குழுக்களிலிருந்து தகுதிபெறும் 4 அணிகள் காலிறுதிச் சுற்றில் இந்த பலப்பலமான அணிகளுடன் மோதவுள்ளன. காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள் தங்களது திறமையை நிருபித்து பதக்கப் பட்டியலில் முன்னேறத் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணை அமைப்பின்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெவ்வேறு பிரிவுகளில் (Bracket) இடம்பெற்றுள்ளன. இதனால் இவ்விரு எதிரி அணிகளும் அரையிறுதியில் மோதாமல், இரு அணிகளும் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தியா தனது காலிறுதிப் போட்டியில் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று வரும் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் யுத்தம் இறுதிப் போட்டியில் அரங்கேறும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.2028ம் ஆண்டு லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்படவுள்ள நிலையில், இந்த ஆசிய விளையாட்டுத் தொடர் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தன. அந்த ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் முழு வீச்சில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.