காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர்... விஷம் குடித்து இளம் ஜோடி தற்கொலை!

 

உத்தரப் பிரதேச மாநிலம் பந்தா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரும், அருகில் உள்ள சித்ரகூட் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளனர். தங்களின் காதல் விவகாரத்தை வீட்டில் கூறி சம்மதம் வாங்கிவிட்டு, விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என இருவரும் முடிவு செய்துள்ளனர். இதன்படி இருவரும் தங்கள் வீட்டில் பேசியபோது, இந்த காதலுக்கு அவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால்   மனமுடைந்த காதல் ஜோடி, யாருக்கும் தெரியாமல் தனியாகச் சந்தித்துப் பேசிக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து வாழ முடியாவிட்டால், சேர்ந்து உயிரை விட்டு விடலாம் எனத் தங்களுக்குள் பேசி விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். இவர்களது இந்த விபரீத முடிவானது இவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் உயிரிழந்த காதல் ஜோடியின் வீடுகளுக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.