பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியவான்பரப்பு தடை நீட்டிப்பு.. ஓராண்டைத் தாண்டிய மோதல்!

 

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே விதிக்கப்பட்ட வான்பரப்புத் தடை தற்போது ஒரு ஆண்டைக் கடந்து மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு தனது வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடையை மே 24, 2026 வரை நீட்டிப்பதாக அறிவித்த சில தினங்களிலேயே, இந்தியாவும் பதிலடி நடவடிக்கையாகப் பாகிஸ்தான் விமானங்களுக்கான தடையை நீட்டித்துள்ளது.

இந்தத் தடையானது மே 24, 2026 அன்று அதிகாலை 05:30 மணி (IST) வரை அமலில் இருக்கும் என்று இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ள நோட்டமில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், பாகிஸ்தான் நிறுவனங்களால் இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள் மற்றும் ராணுவ விமானங்கள் ஆகியவற்றுக்கு இந்திய வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதி கிடையாது.

கடந்த 2025-ஆம் ஆண்டு பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஏப்ரல் 30 முதல் இந்தியா இந்தத் தடையை அமல்படுத்தியது. இந்த வான்பரப்புத் தடையால் இந்திய விமானங்கள் வளைகுடா நாடுகள், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்குச் செல்ல பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்க்க வேண்டியுள்ளது. இதனால் பயண நேரம் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை அதிகரித்துள்ளது.

எரிபொருள் செலவு அதிகரிப்பதால் இந்திய விமான நிறுவனங்களுக்கு மாதம் ஒன்றுக்குச் சுமார் 10 மில்லியன் டாலர் கூடுதல் சுமை ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் செலவு மற்றும் கூடுதல் பயண நேரம் காரணமாக சர்வதேச விமானக் கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன.

இந்தத் தடை ஒரு மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு நீட்டிக்கப்பட்டு வருகிறது. எல்லையில் சுமுகமான சூழல் திரும்பாத வரை இந்தத் தடை நீடிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.