மகளிர் டி20 உலகக் கோப்பை - உலக சாதனை படைத்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா!

 

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்திய அணியின் முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா முதலிடத்தைப் பிடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. பர்மிங்காமில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில்  பந்துவீசிய தீப்தி சர்மா, தனது சர்வதேச டி20 கேரியரின் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். அவர் 4 ஓவர்கள் வீசி வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை (5/10) வீழ்த்தி அசத்தினார்.

இந்த பந்துவீச்சின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் தனது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கையை 166 ஆக உயர்த்திய தீப்தி சர்மா, உலக அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற வரலாற்று மைல்கல்லை எட்டினார்.

இதற்கு முன்பு சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் தாய்லாந்து நாட்டின் திபாட்சா புத்தாவோங் (165 விக்கெட்டுகள்) முதலிடத்திலும், ருவாண்டா நாட்டின் ஹென்ரியெட் இஷிம்வே (160 விக்கெட்டுகள்) இரண்டாம் இடத்திலும் இருந்தனர். தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக தீப்தி சர்மா எடுத்த 5 விக்கெட் பிரமாதமான ஆட்டத்தின் மூலம், இவர்கள் இருவரின் உலக சாதனைகளையும் முறியடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

தீப்தி சர்மாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பந்துவீச்சு மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் சிறப்பான அரைசதம் (68 ரன்கள்) ஆகியவற்றின் உதவியோடு, இந்திய மகளிர் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்த உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. உலக சாதனை படைத்துள்ள தீப்தி சர்மாவிற்குப் பல்வேறு முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.