ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மன்!

 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மன், ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதைத் தொடர்ந்து அவரை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை இடைநீக்கம் செய்துள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 29 வயதான முன்னணி தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மனிடம் நடத்தப்பட்ட மாதிரி பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரைத் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 100 மீட்டர் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட 7 போட்டிகளை உள்ளடக்கிய 'ஹெப்டாத்லான்' பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர்.

இரண்டு கால்களிலும் தலா 6 விரல்களுடன் களம் கண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தனது விளையாட்டுப் பயணத்திலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.