பிறந்த 13 நாட்களிலேயே பாஸ்போர்ட் - சர்வதேச சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த இந்தியக் குழந்தை!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் வெளிநாட்டில் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தைக்கு மிகக் குறுகிய காலத்திற்குள் பாஸ்போர்ட் பெறப்பட்ட நிகழ்வு சர்வதேச அளவில் சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிஷ் மற்றும் கீதாமாதுரி தம்பதியினர் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர். கடந்த மே 30-ம் தேதியன்று இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து ஜூன் 1-ம் தேதியன்று குழந்தைக்கு 'அகஸ்யா பிரின்ஸ்' எனப் பெயரிடப்பட்டு அதிகாரப்பூர்வ பிறப்புச் சான்றிதழ் பெறப்பட்டது.
குழந்தை பிறந்த வேகத்திலேயே, ஜூன் 2-ம் தேதியன்று உரிய ஆவணங்களுக்கான விண்ணப்பப் பணிகளும், ஜூன் 6-ம் தேதியன்று பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்பட்டன.
விண்ணப்பித்த 13 நாட்களுக்குள்ளாக, அதாவது ஜூன் 12-ம் தேதியன்று குழந்தைக்குப் பாஸ்போர்ட் ஒப்புதல் அளிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்தச் சாதனையானது தற்போது சர்வதேச சாதனைப் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.